மழை வேண்டி மக்கள் காத்திருக்கும் நிலையில் சென்னையில் பனிப்பொழிவா? இந்திய வானிலை மையம் விளக்கம்


மழை வேண்டி மக்கள் காத்திருக்கும் நிலையில் சென்னையில் பனிப்பொழிவா? இந்திய வானிலை மையம் விளக்கம்
x
தினத்தந்தி 5 Nov 2019 4:00 AM IST (Updated: 5 Nov 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

மழை வேண்டி மக்கள் காத்திருக்கும் நிலையில் சென்னையில் நிலவி வரும் பனிப்பொழிவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து இந்திய வானிலை தென்மண்டல தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததின் விளைவாக கடந்த வாரத்தில் தமிழகம் முழுவதும் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து மழை ஓரளவு குறைந்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் கடந்த 2 நாட்களாக வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.

பொதுவாகவே வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். தமிழகத்தின் பெருமளவு தண்ணீர் தேவையை ஈடுசெய்வதே வடகிழக்கு பருவமழை தான். கடந்த ஆண்டுகளில் பொய்த்தது போலவே இந்த ஆண்டும் மழை பொய்த்துவிடக்கூடாது என்று மக்கள் வேண்டி வருகின்றனர். அதற்கேற்ப வருண பகவான் கருணையால் தமிழகத்தில் மழையும் பெய்து வருகிறது.

எப்போதுமே மழைக்காலத்துக்கு பிறகு தான் பனிக்காலம் தோன்றும். அதாவது கார்த்திகை மார்கழி மாதங்கள் முன் பனிக்காலமாகவும், தை மற்றும் மாசி மாதங்கள் பின் பனிக்காலமாகவும் கணக்கிடப்படுகின்றன. பனி தொடங்கிய பின்பு மழைப்பொழிவு என்பது தானாகவே குறைந்துவிடும்.

இந்தநிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரையிலும் நகரின் பல இடங்களில் பனிப்பொழிவை பார்க்க முடிகிறது. இதனால் மழை இனி பெய்யாமல் போய்விடுமோ? என்று சென்னைவாசிகள் கலக்கத்தில் உள்ளனர். மீண்டும் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்க நேரிடுமோ... என்று பயந்து கிடக்கின்றனர்.

இந்த திடீர் பனிப்பொழிவு குறித்து இந்திய வானிலைத்துறை தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

சென்னையில் காற்றின் வேகம் தணிந்திருக்கிறது. இதனால் காற்றில் நிலவும் ஈரப்பதத்தில் தூசிகள், மாசுக்கள் சேர்ந்துவிடுவதால் அவை அப்படியே பனிப்பொழிவு போல காட்சி தருகிறது. மற்றபடி இதனால் மழைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. டிசம்பர் இறுதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும். இன்னும் பனிக்காலம் ஆரம்பிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story