அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
மாங்காடு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு, பட்டூர், வி.எம்.எஸ்.நகர் பகுதியில் குடியிருப்புகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் மழைநீர் செல்ல கால்வாய் வசதிகள் செய்து தரப்படவில்லை என தெரிகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் இப்பகுதி சேறும் சகதியுமாக மாறி அப்பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள தெருக்களில் உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் சரிவர எரியாமல் பழுதடைந்து காணப்படுகிறது. குடிநீர் வசதியும் செய்து தரப்படாததால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாங்காடு பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தனர். அப்போது அதிகாரிகள் யாரும் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாங்காடு போலீசார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அதிகாரிகள் புகார் மனுவை பெற்று கொண்டதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story