பெங்களூருவில் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு; காங்கிரஸ் போராட்டம்


பெங்களூருவில் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு; காங்கிரஸ் போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 5 Nov 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் விவசாய பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பெங்களூரு கன்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

பெங்களூரு,

மத்திய அரசு தாராள வர்த்தக பொருளாதார ஒப்பந்தத்தில் சேர முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தினால், ‘பால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும். பாலின் விலை குறையும்‘ என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் பாலினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் கடுமையாக வீழ்ச்சி அடையும் என்று தெரிகிறது.

ஆனால் பாலை மட்டும் நம்பி உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த ஒப்பந்தத்தை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே தலைமையில், காங்கிரசின் விவசாய பிரிவினர் நேற்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கன்டோன்மெண்ட் ரெயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். அதையடுத்து அவர்கள் ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

இந்தநிலையில் அங்கு வந்த போராட்டகாரர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் கோஷங்கள் எழுப்பினர். அதையடுத்து காங்கிரசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story