திருக்கனூர் அருகே போராட்டம் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்


திருக்கனூர் அருகே போராட்டம் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 4 Nov 2019 10:45 PM GMT (Updated: 4 Nov 2019 10:27 PM GMT)

திருக்கனூர் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே கொடாத்தூரில் பழைய காலனி, புதுக்காலனி, ராஜீவ்காந்தி நகர் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக கிடைக்கவில்லை. உட்புற சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன. இதனை சரிசெய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் பழைய காலனி, புது காலனி, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ஏராளமான பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கொடாத்தூர் சமுதாயக்கூடம் அருகே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் உறுதி

இதுபற்றி தகவல் அறிந்து திருக்கனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் போலீசாருடன் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்கள் காலனியில் குடிநீர், சாலை வசதிகளை செய்துகொடுக்கவேண்டும், தீபாவளி பண்டிகைக்கு அரசால் வழங்கப்படும் இலவச துணிகளை விரைவில் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story