மோட்டார் சைக்கிள் மீது லத்தியை வீசியதில் 3 பேர் காயம்: சப்-இன்ஸ்பெக்டர் பணிஇடை நீக்கம் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
மோட்டார் சைக்கிள் மீது லத்தியை வீசியதில் 3 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தத்தை பணிஇடை நீக்கம் செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
பொள்ளாச்சி,
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவரது மகன் சர்தார் (வயது 25). நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர்கள் போத்தனூரை சேர்ந்த ஷோன்பர் (18), குனியமுத்தூரை சேர்ந்த அப்சல் (17). இவர்கள் 3 பேரும் ஆழியாறு அணை பகுதியை சுற்றி பார்க்க நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- வால்பாறை ரோடு நா.மூ.சுங்கத்தில் இருந்து தென்சங்கம்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக 3 பேர் வந்த மோட்டார் சைக்கிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் நிறுத்தினார்.
ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் நிற்காமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் கையில் வைத்திருந்த லத்தியை எடுத்து மோட்டார் சைக்கிளை நோக்கி வீசியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சர்தார், அப்சல், ஷோன்பர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தென்சங்கம்பாளையத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விபத்தில் காயமடைந்த நகைக்கடை தொழிலாளி சர்தார் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காயம் ஏற்படுத்தும் நோக்கில் தடுத்து நிறுத்தியதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரிடம் துறை ரீதியாகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மோட்டார் சைக்கிள் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் லத்தியை தூக்கி வீசியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார். தொடர்ந்து வால்பாறை துணை சூப்பிரண்டு விவேகானந்தன் விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story