காற்று மாசுவினால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி


காற்று மாசுவினால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 5:48 PM GMT)

காற்று மாசுவினால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்சி,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நீர் நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகள், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நேற்று திருச்சி கலையரங்கம் வளாகத்தில் உள்ள பழைய திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த முகாமை தமிழக அரசின் முதன்மை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, குடிநீர் வடிகால் வாரியம், திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் 12 அரங்குகள் அமைக் கப்பட்டு இருந்தது. இந்த அரங்குகளில் தீ விபத்து, சாலை விபத்து, மழை வெள்ள காலங்களில் அபாயங்களில் சிக்கி கொள்ளாமல் தப்புவது எப்படி என்பது பற்றி விளக்கி கூறப்பட்டது. தீயணைப்பு துறையினர் தங்களிடம் உள்ள ரப்பர் படகுகள், தீ தடுப்பு சாதனங்களை பார்வைக்கு வைத்து இருந்தனர்.

மேலும் உயரமான கட்டிடங்களில் தீவிபத்து ஏற்பட்டால் அதில் சிக்கி உள்ளவர்களை கயிறு, ஏணிகளை பயன்படுத்தி மீட்பது எப்படி என்பது பற்றிய ஒத்திகைகளையும் செய்து காட்டினர். இந்த முகாமில் இடம்பெற்றிருந்த அரங்குகளை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்.முகாமை தொடங்கி வைத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காற்று மாசு இல்லை

புயல், வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களின் நோக்கம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான். பேரிடர்களால் தமிழகத்தில் இனிமேல் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படக்கூடாது.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழகத்திற்கு பரவவில்லை. இதனை மக்கள் தைரியமாக நம்பலாம். வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம். பீதி அடையவும் தேவை இல்லை. காற்று மாசுவினால் தமிழகத்திற்கு இதுவரை பாதிப்பு இல்லை. சென்னையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் திங்கட் கிழமை இரவும், செவ்வாய்க்கிழமை காலையிலும் ஏற்பட்டது பனிப்பொழிவு தான். காற்றின் தன்மை குறைந்ததால் மாசு ஏற்பட்டது போன்ற தோற்றம் காணப்பட்டு உள்ளது. தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் இதனை கண்காணித்து உள்ளது. காற்று மாசு பிரச்சினையில் தமிழகம் நல்ல நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புகார் செய்யலாம்

தமிழகம் முழுவதும் இதுவரை 9,940 ஆழ்துளை கிணறுகள் மழை நீர் சேகரிப்பு மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆழ்துளை கிணறுகள் மட்டும் அல்ல, சுவர் இல்லாத கிணறுகள், திறந்த நிலையில் உள்ள சாக்கடைகள் பற்றியும், ஏரி, குளங்கள் குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் அதுபற்றி உடனடியாக மாவட்ட கலெக்டர்களிடம் புகார் செய்யலாம். ஆழ்துளை கிணற்றை மூடவேண்டும் என பேசிய சமூக ஆர்வலரிடம் கரூர் மாவட்ட கலெக்டர் வாக்குவாதம் செய்ததாக புகார் வந்தால் அதுபற்றி விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, பேரிடர் மீட்பு மேலாண்மை ஐ.ஜி. பாஸ்கரன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மத்திய மண்டல துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் உள்பட அதிகாரிகள் முகாமில் கலந்து கொண்டனர்.



Next Story