தஞ்சை அருகே அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, பா.ஜ.க.வினர் பாலாபிஷேகம்


தஞ்சை அருகே அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, பா.ஜ.க.வினர் பாலாபிஷேகம்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 6:41 PM GMT)

தஞ்சை அருகே அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு பா.ஜ.க.வினர் பாலாபிஷேகம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் வீதியில் திருவள்ளுவர் சிலை உள்ளது. இந்த சிலை மீது சிலர் சேறு, சகதியை வீசி அவமதிப்பு செய்தனர். இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று காலை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஒன்று கூடினர்.

பின்னர் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ், மாவட்ட பொதுச் செயலாளர் உமாபதி, மாநகர தலைவர் விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

களங்கப்படுத்த

திருவள்ளுவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது. திருக்குறளை உலக நாடுகள் அனைத்தும் அறியக்கூடிய வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இதை பிடிக்காத சிலர் பா.ஜ.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்துள்ளனர்.

இங்கே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் திருவள்ளுவருக்கு எதிராக பா.ஜ.க.வின் செயல்பாடு இருப்பதாக விமர்சனம் செய்கின்றனர். திருவள்ளுவரின் புகழை உலக அளவில் எடுத்து செல்லக்கூடிய பா.ஜ.க. அவரை ஏன் அவமானப்படுத்த வேண்டும்?. தற்போது பா.ஜ.க.வின் டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் படத்தை எப்படி வெளியிட்டு இருக்கிறோமோ அதை ஒட்டி தான் 1,800-ம் ஆண்டுகளில் இருந்து இருக்கிறது.

இந்துக்கள்

அதற்கு பிறகு அவர் எந்த மதத்தையும் சாராதவர் போல தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். திருவள்ளுவராக இருந்தாலும் சரி, திருவள்ளுவர் சார்ந்த சமுதாயமாக இருந்தாலும் சரி. அவர்கள் தீவிரமான இந்துக்கள் தான். திருக்குறளின் புகழை கெடுக்கக்கூடிய வகையில் செயல்படுவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story