திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: மாணவர்கள்-அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: மாணவர்கள்-அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்யக்கோரி மாணவர்கள்-அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் வீதியில் திருவள்ளுவர் சிலை உள்ளது. இந்த சிலை மீது சிலர் சேறு, சகதியை வீசி அவமதிப்பு செய்தனர். இது தொடர்பாக தஞ்சை தமிழ்ப்பல் கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நேற்று 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழகத்தினர் பலர் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

நாம் தமிழர் கட்சி

இதேபோல் நாம் தமிழர் கட்சியினர் மாநில ஒருங்கிணைப்பாளர் கிமாயூன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைமை கழக பேச்சாளர் கரிகாலன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர் துரைமுருகன், மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணகுமார், நாசரேத், செயலாளர் கந்தசாமி, தொகுதி செயலாளர் கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டுடனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும். திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

மாணவர்கள்

கரந்தையில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story