திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது


திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
x
தினத்தந்தி 6 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறினார்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செயல், இன்று தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகச்சிறந்த புலவர் திருவள்ளுவர். பா.ஜனதா கட்சியினர் டுவிட்டரில் திருவள்ளுவருக்கு காவி உடுத்தி பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த செயலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டிப்பதுடன் தமிழக மக்கள் எதிர்த்து களம் இறங்கி ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ரஜினிகாந்த், முதலில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அவர் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார், பா.ஜனதா கட்சியின் மக்கள் விரோத கருத்துக்களை ரஜினிகாந்த் மறுத்து பேசுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு குழப்பமான அரசியலை அவர் மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிறார்கள். கலைஞர்களுக்கு விருது கொடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

சிறந்த கலைஞர்களுக்கு விருது கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நேரத்தில் எதற்காக அவருக்கு விருது வழங்குகிறார்கள்? இதற்கு அரசியல்தான் காரணம் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அதன் மூலம் அவர் தோளில் ஏறி தமிழ்நாட்டிற்குள் நுழையலாம் என்று பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதனை தமிழக மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தளி முன்னாள் எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் லகுமய்யா, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாதையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஓசூர் மாநகராட்சி, ஒன்றிய பகுதிகளில் நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், வீட்டு மனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூர் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் தளி எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.கே.மாதையன் முன்னிலை வகித்தார். இதில், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமய்யா, மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.சி.நஞ்சப்பா, பழனி, சுந்தரவள்ளி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் பேசியதாவது:-

7½ லட்சம் மக்கள் வாழ்ந்து வரும் ஓசூர் மாநகரத்தில், 4 லட்சம் மக்களுக்கு வீடில்லை. இவர்களுக்கு வீடு கிடைக்கும் வரை கம்யூனிஸ்டு கட்சி ஓயாது. எங்கள் கோரிக்கைகள் வெற்றி பெறும் வரையில், கம்யூனிஸ்டு கட்சி களத்தில் நிற்கும், ஓசூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், ஓசூர் தாசில்தார் செந்தில்குமரனை, மகேந்திரன், ராமச்சந்திரன், லகுமய்யா மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கி, அவற்றை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொண்டனர்.

Next Story