திருக்கோவிலூர் அருகே, பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொன்ற கொடூரம் - தந்தை, தாத்தா கைது
திருக்கோவிலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் ஆற்றுமணலில் புதைத்து கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக தந்தையையும், உடந்தையாக இருந்ததாக தாத்தாவையும் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் இக்கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருக்கோவிலூர்,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வடமருதூரைச்சேர்ந்த துரைக்கண்ணு என்பவரது மகன் வரத ராஜன்(வயது 29). இவருடைய மனைவி சவுந்தர்யா(வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 14 மாதங்கள் ஆகிறது. கர்ப்பிணியாக இருந்த சவுந்தர்யாவுக்கு கடந்த 17 நாட்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சுசித்ரா என்று பெயர் சூட்டினர். ஆனால் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த வரதராஜனுக்கு, மனைவி பெண் குழந்தையை பெற்றெடுத்தது பிடிக்கவில்லை. இதனால் குழந்தையை கொல்ல முடிவு செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சவுந்தர்யா தனது குழந்தைக்கு பால்கொடுத்து அருகில் தூங்க வைத்து விட்டு தானும் அயர்ந்து தூங்கினார். சவுந்தர்யா அயர்ந்து தூங்குவதை பார்த்த வரதராஜன் படுக்கையில் இருந்து எழுந்து மனைவி அருகில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை துண்டால் போர்த்தி தூக்கிக்கொண்டு அத்தண்டமருதூர் ஆற்றுப் பாலத்துக்கு சென்றார்.
அங்கு ஆற்று மணலில் குழி தோண்டி குழந்தையை உயிரோடு புதைத்தார். மணலால் மூடப்பட்ட குழந்தை வீறிட்டு அழுதது. சிறிது நேரத்தில் குழந்தை மூச்சொடுங்கி இறந்து போனது. குழந்தை இறந்ததும் வரதராஜன் வீட்டுக்கு திரும்பி சென்றார். அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த சவுந்தர்யா, குழந்தையை காணாமல் திடுக்கிட்டு கதறி அழுதார். அவரது அழுகுரல் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் குழந்தையை தேடிய போது வரதராஜனும் ஏதும் தெரியாதது போல மற்றவர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடினார்.
ஆனால் சவுந்தர்யாவுக்கு கணவர் மீது சந்தேகம் வரவே அதனை மற்றவர்களிடத்தில் கூறினார். அதனால் அக்கம், பக்கத்தினர் வரதராஜனை மிரட்டி கேட்டபோது அவர் உண்மையை கக்கினார். தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது பிடிக்காததால், நள்ளிரவில் குழந்தையை தூக்கிச்சென்று ஆற்றுமணலில் உயிருடன் புதைத்து கொன்று விட்டதாக கூறினார். இதன் பிறகு அவர்களை குழந்தையை புதைத்த இடத்திற்கு அழைத்து சென்று காண்பித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் குழந்தையின் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். அப்போது குழந்தையின் உடலை பார்த்து அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் கதறி அழுதனர்.
இதன்பிறகு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தந்தை வரதராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக குழந்தையின் தாத்தா துரைக்கண்னு ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story