திருப்பூர் மாநகரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு - சுப்பராயன் எம்.பி. குற்றச்சாட்டு


திருப்பூர் மாநகரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு - சுப்பராயன் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Nov 2019 3:45 AM IST (Updated: 6 Nov 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று சுப்பராயன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர், 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகரில் பூ மார்க்கெட், பழைய பஸ் நிலையம் முன்புறம் உள்ள தினசரி மார்க்கெட், பழைய பஸ் நிலையம் ஆகியவற்றை இடித்து புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்காக மார்க்கெட் மற்றும் பஸ் நிலையத்தில் கடைகள் அமைத்துள்ளவர்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. கடைகளை காலி செய்வதில் பிரச்சினை இருந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூர் தொகுதி சுப்பராயன் எம்.பி., பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதிக்கு சென்று அங்குள்ள வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் சுப்பராயன் எம்.பி. அவர்களிடம் பேசும்போது, ‘பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட்டில் தற்போது கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு டோக்கன் வழங்க வேண்டும். புதிதாக மார்க்கெட் கடைகள் கட்டிய பிறகு ஏற்கனவே டோக்கன் பெற்றவர்களை முதலில் கடைகளில் அமர்த்தப்படும் என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் அளிக்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு பிறகு பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட் மற்றும் பழைய பஸ் நிலையத்தை இடிக்க வேண்டும். அதுவரை அங்கேயே கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும்’ என்றார்.

அவருடன் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சிவபாலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்ட நடவடிக்கை மிகவும் தவறானது. மாநகரில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. வீதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. எழில்மிகு நகரம் என்கிறார்கள். இங்கு குப்பை குவியலாக சீர்கெட்டு கிடக்கிறது. ஆனால் மார்க்கெட் வியாபாரிகளின் தொழிலை கெடுப்பதற்காக புதிய கட்டிடம் கட்டுகிறார்கள். ஏற்கனவே இருக்கும் கட்டிடத்தை பழுது பார்த்து வாடகையை அதிகரித்தால் கூட வியாபாரிகள் செலுத்த தயாராக இருக்கிறார்கள். இதுவரை செய்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது என்று மத்திய மந்திரியிடம் புகார் கொடுத்துள்ளேன். இதன்மீது விரிவான விசாரணை நடத்த கமிட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர இருக்கிறேன் என்றார். 

Next Story