திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 84 பேர் கைது
திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 84 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், 1998-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு உதவியாளர் பணி வழங்க வேண்டும். 2008-ம் ஆண்டுக்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கேங் மேன் பதவியில் தேர்வுகள் இல்லாமல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதன் ஒருபகுதியாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருப்பூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் அன்பு செல்வன் தலைமையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 84 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் அவர்கள் ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது “எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்” என்றனர்.
Related Tags :
Next Story