ஆண்டிமடம் அருகே 8 பிள்ளைகள் பெற்றும் பராமரிப்பு இன்றி தவிக்கும் மூதாட்டி


ஆண்டிமடம் அருகே 8 பிள்ளைகள் பெற்றும் பராமரிப்பு இன்றி தவிக்கும் மூதாட்டி
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 7:20 PM GMT)

ஆண்டிமடம் அருகே 8 பிள்ளைகள் பெற்றும் பராமரிப்பு இன்றி மூதாட்டி தவித்து வருகிறார்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சுலோச்சனா(வயது 90). இவருக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெகநாதன் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ரங்கராஜன்(68), மனோகர்(58), கஜேந்திரன்(50) ஆகிய 3 மகன்கள் திருப்பூரிலும், இளங்கோவன் (55), வீரராகவன்(53) ஆகிய 2 மகன்கள் கவரப்பாளையத்திலும் கூலி வேலை செய்து வருகின்றனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி கவரப்பாளையம் சுற்றுவட்டார கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுலோச்சனா கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள மகன்களுடன் இருந்துவிட்டு, கடந்த மாதம் திருப்பூரில் இருந்து கவரப் பாளையத்திற்கு வந்தார். இந்த நிலையில் ஆண்டிமடம்- விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுலோச்சனா படுகாயம் அடைந்தார். அவரை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அவரை கவரப்பாளையத்தில் வசிக்கும் மகன் இளங்கோவன் அழைத்துச்சென்றார்.

சிகிச்சை

அப்போது இளங்கோவனின் மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தாயை பராமரிக்க முடியாமல் விட்டுவிட்டார். இதனால் சுலோச்சனா உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறாத நிலையில் கவரப்பாளையத்தில் உள்ள பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்தார். இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர், இதுகுறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது அறிவுரையின் பேரில், ஆண்டிமடம் போலீசார் மற்றும் தாசில்தார் குமரய்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

Next Story