திசையன்விளையில் பயங்கரம்: பெட்டிக்கடைக்காரர் வெட்டிக்கொலை - 3 பேருக்கு வலைவீச்சு


திசையன்விளையில் பயங்கரம்: பெட்டிக்கடைக்காரர் வெட்டிக்கொலை - 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Nov 2019 3:30 AM IST (Updated: 6 Nov 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் பெட்டிக்கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை முருகேசபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 57). இவர் திசையன்விளை- உடன்குடி ரோட்டில் உள்ள முருகேசபுரம் விலக்கில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர் மீது திசையன்விளை போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மடத்தச்சம்பாடு கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம் மகன் முருகேசன் (40) மற்றும் அவரது நண்பர்கள் ராஜாமணியின் பெட்டிக்கடை முன்பு அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு முருகேசனின் செல்போன் திருட்டு போய் உள்ளது. அதை ராஜாமணிதான் திருடிவிட்டார் எனக்கூறி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜாமணி, முருகேசன் காதை கடித்துள்ளார். பதிலுக்கு முருகேசன், ராஜாமணியின் பெட்டிக்கடையை அடித்து உடைத்தார்.

இதுதொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் ராஜாமணி நேற்று முன்தினம் இரவு பெட்டிக்கடை அருகில் நிறுத்தியிருந்த லாரியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன், செல்வம் மகன் சதீ‌‌ஷ் (23), அப்புவிளையை சேர்ந்த சுந்தரபாண்டி மகன் ராஜசேகர் ஆகிய 3 பேர் சேர்ந்து ராஜாமணியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதனை அறிந்ததும் ராஜாமணியின் மனைவி பாக்கியலட்சுமி சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார். லாரியில் கிடந்த கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் இதுபற்றி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், ராஜாமணியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர கொலை பற்றிதகவல் அறிந்ததும் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். நெல்லையில் இருந்து மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது கிழக்கு நோக்கி சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால்,யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர் ஆனந்தி, கைரேகை நிபுணர் கிறிஸ்டா ஆகியோரும் வந்து அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.

கொலை தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண் ராஜா, வினிகுமார், நம்பியார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் முருகேசன் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story