மாணவர்கள் கற்கும் திறனறிந்து ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் மாவட்ட கல்வி அதிகாரி அறிவுறுத்தல்


மாணவர்கள் கற்கும் திறனறிந்து ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் மாவட்ட கல்வி அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 5 Nov 2019 10:30 PM GMT (Updated: 5 Nov 2019 10:26 PM GMT)

மாணவர்கள் கற்கும் திறனறிந்து ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர், சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில், தேசிய அளவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சி முகாம் நடந்தது. அதை தொடங்கி வைத்து மாவட்ட கல்வி அதிகாரி சீனிவாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தைகள் நாம் கற்பிக்கும் முறையில் கற்கவில்லை என்றால், அவர்கள் கற்கும் திறனறிந்து அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

ஆசிரியர்களின் கற்பித்தல், மாணவர்களின் பன்முகத் தன்மையைப் புரிந்து கொள்வதாக இருக்க வேண்டும். புதிய பொருந்தக் கூடிய அணுகுமுறை அனைத்து மாணவர்களுக்கும் உதவக் கூடியதாகவும் அமைய வேண்டும்.

பரிந்துரை

ஆராய்ச்சி மற்றும் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்களுக்குப் பல்வேறு கற்றல் தேவைகளை அதே வகுப்பறையில் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய கலைத்திட்ட வடிவமைப்பின் முக்கிய நோக்கம், மாணவர்களை தாமாகவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்குதல், மற்றவர்களின் உணர்வுகளையும் நலன்களையும் உணர்ந்து செயல்பட வைத்தல், பொருளாதார மற்றும் சமூக மாற்ற செயல்பாடுகளில் மாணவர்கள் தாங்களே ஈடுபடும் வகையில் அவர்களை மேம்படுத்துதல் ஆகும்.

கலாசாரம்

இந்தியா எண்ணற்ற மண்டல மற்றும் பலதரப்பட்ட உள்ளூர் கலாசாரத்தினால் பலவகையான சமூகத்தை கொண்டது. இந்திய மக்களின் மத நம்பிக்கைகளும், வாழ்க்கை முறைகளும், சமூக சூழல்களும் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. அனைத்து பிரிவினருக்கும் சம காலத்தில் வாழவும், வளங்களைப் பெறவும் உரிமை உள்ளது. நமது சமூகத்தில் பொதிந்துள்ள உள்ளூர்சார்ந்த கலாசார பன்மைத்துவத்திற்கு ஏற்றவாறு கல்வி அமைப்புகளின் தேவைகள் இணக்கமான வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

487 ஆசிரியர்கள்

வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஒன்றியங்களை சேர்ந்த 487 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.முன்னதாக உயர் தொடக்க நிலை வகுப்புகளுக்கு கற்றுத் தரும் 300 ஆசிரியர்களுக்கு இரு கட்டங்களாக இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி தொடக்க விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சீனிவாசன், விஜயலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story