குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை; அரசியல் மாற்றத்துக்காக போராடுகிறோம் - சஞ்சய் ராவத் பேட்டி


குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை; அரசியல் மாற்றத்துக்காக போராடுகிறோம் - சஞ்சய் ராவத் பேட்டி
x
தினத்தந்தி 6 Nov 2019 12:16 AM GMT (Updated: 6 Nov 2019 12:16 AM GMT)

சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்-மந்திரி என்று மீண்டும் திட்டவட்டமாக கூறிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், நாங்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை, அரசியல் மாற்றத்துக்காக தான் போராடுகிறோம் என்றார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 13 நாட்கள் ஆகியும் பாரதீய ஜனதா- சிவசேனா இடையே ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் தான் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி என அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், மீண்டும் அதை உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டிய அரசியலின் முகத்தை சிவசேனா மாற்ற விரும்புகிறது. நாங்கள் இங்கே குழப்பத்தை உருவாக்கவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் சொந்த நிலைப்பாட்டை கொண்டு உள்ளனர்.

சுயேச்சைகளிடம் இருந்து அதிகமான ஆதரவை பெற்று வருவதால் சிவசேனா அதிக முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. நாங்கள் நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கிறோம். அதில் வெற்றி பெறுவோம். சிவசேனாவை சேர்ந்தவர் தான் அடுத்த முதல்-மந்திரி. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அடுத்த முதல்-மந்திரியாக இருக்கமாட்டார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பாரதீய ஜனதா சிவசேனாவுக்கு அளித்த வாக்குறுதியை(ஆட்சியில் சமபங்கு) பற்றி யாரும் பேசாதது வருத்தம் அளிக்கிறது.

நான் எனது கட்சி சார்பாக பேசுகிறேன். உத்தவ் தாக்கரேயை ஒரு பொய்யர் என காட்ட யாரோ முயற்சிக்கின்றனர். அது தவறு.

நீதி மற்றும் உண்மையின் வரையறையை மாற்றுவதற்கான முயற்சி நடந்துள்ளது. அது அவர்களின் கலாசாரம் மற்றும் போதனைகளாக இருக்கலாம். மராட்டியத்தின் 11 கோடி மக்களுக்கு உண்மை தெரியும். எல்லோரும் அதிகாரத்திற்காக பேராசை கொண்டவர்கள். முக்கியமான பதவிகளை யாரும் கைவிட விரும்பவில்லை. உத்தவ் தாக்கரே மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவாக உள்ளார்.

நேற்று (நேற்றுமுன்தினம்) இரவு சரத்பவாரை தொடர்பு கொண்டு பேசியதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் ஒரு தேசிய தலைவர். மராட்டியத்தின் பிரதிநிதி. இதில் யாருக்கும் பிரச்சினை இல்லை.

சரத்பவாருடன் பேசியதற்காக என் மீது வருத்தப்படுபவர்களையும், சரத்பவாரை அணுகுவதற்கு கடுமையாக முயற்சிப்பவர்களையும் நான் அறிவேன். இது அரசியல், இதுபோன்ற விஷயங்களை நீங்கள் நீண்டகாலமாக மறைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில், ‘குழப்பத்தை உருவாக்குவது மட்டுமே எனது நோக்கம் அல்ல, இந்த நிலை மாறவேண்டும் என்பதே எனது முயற்சி' என கவிஞர் துஷ்யந்த் குமாரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி சஞ்சய் ராவத் டுவிட் செய்துள்ளார்.

Next Story