முதல்-மந்திரி பதவியை சிவசேனாவுக்கு விட்டு தர முடியாது; பா.ஜனதா மீண்டும் திட்டவட்டம்


முதல்-மந்திரி பதவியை சிவசேனாவுக்கு விட்டு தர முடியாது; பா.ஜனதா மீண்டும் திட்டவட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2019 5:49 AM IST (Updated: 6 Nov 2019 5:49 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவியை பெறுவதில் சிவசேனா தீவிரமாக உள்ள நிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் நேற்று பாரதீய ஜனதா மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

மும்பை, 

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், “தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு விரைவில் அமையும். அவர் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் முதல்-மந்திரியாக இருப்பார். கூட்டணி ஆட்சி குறித்து பேச சிவசேனாவுக்காக பாரதீய ஜனதாவின் கதவுகள் 24 மணி நேரமும் திறந்தே உள்ளன” என்றார்.

மந்திரி கிரிஷ் மகாஜன் கூறுகையில், “அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்-மந்திரியாக இருக்க வேண்டும் என முடிவு செய்து உள்ளோம். முதல்-மந்திரி பதவி தவிர மற்ற இலாகாக்களை பகிர்ந்து கொள்வது குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். நாங்கள் இந்தியா, பாகிஸ்தான் கிடையாது. 2 கட்சி தலைவர்களும் சந்தித்து ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ள முடியும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்பது குறித்து எழுத்துப்பூர்வமாக கேட்க முடியாது. அடுத்த சில நாட்களில் மராட்டிய அரசியல் சூழலில் திருப்பம் ஏற்படலாம் என நம்புகிறேன். பா.ஜனதா குறித்து சஞ்சய் ராவத் பேசுவது எங்களுக்கு பிடிக்கவில்லை” என்றார்.

ஆட்சி அமைப்பதில் எந்த நேரத்திலும் நல்ல செய்தி வெளியாகலாம் என்று நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறினார்.

Next Story