மங்களூருவில் காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது


மங்களூருவில் காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்;  4 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 4:46 PM GMT)

மங்களூருவில், காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு, 

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே தொக்கொட்டு பகுதியில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது அந்த காரின் பின்பகுதியில் கஞ்சாவை பதுக்கிவைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து 10 கிலோ கஞ்சா, கார், 3 செல்போன்கள் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் விசாரணையில், கைதானவர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் அபுபக்கர் ஜமாத் (வயது 24), முகமது அஷ்ரப் (30), முகமது ஆப்ரித் (22), முகமது அர்ஷாத் (18) ஆகியோர் என்பதும், இவர்கள் கேரளாவில் இருந்து கஞ்சாவை மங்களூருவுக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

அத்துடன் இவர்கள் அடிக்கடி கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து மங்களூருவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பி.எஸ்.ஹர்ஷா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

மங்களூரு மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தீவிர வாகன சோதனை நடத்தியும், கண்காணிப்பு பணி மேற்கொண்டும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைத்துள்ளோம்.

இதுதவிர பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story