திப்பு ஜெயந்தி விழா ரத்து உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


திப்பு ஜெயந்தி விழா ரத்து உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Nov 2019 11:15 PM GMT (Updated: 6 Nov 2019 5:31 PM GMT)

திப்பு ஜெயந்தி விழா ரத்து உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, திப்பு சுல்தானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திப்பு ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ந் தேதி திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்தி வந்தது.

திப்பு ஜெயந்தியை அரசு விழாவாக நடத்துவதை பா.ஜனதா கடுமையாக எதிர்த்தது. திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டார் என்று கூறி அக்கட்சி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. சில இடங்களில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைந்தது.

ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே முதல்-மந்திரி எடியூரப்பா, திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு விழாவாக நடத்தும் உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பித்தார். கர்நாடக அரசின் இந்த முடிவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி, “கர்நாடக அரசு திப்பு ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடும் உத்தரவை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் 2 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணமாக அரசு கூறுகிறது. ராஜ்யோத்சவா கொண்டாட்டத்தின்போது கூட தான் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழுகிறது. வருகிற 10-ந் தேதி மாநிலத்தில் நடைபெறும் திப்பு ஜெயந்தியின்போது, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.

இந்த மனு மீதான விசாரணை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story