உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் - வேலூர் மாநகராட்சி புதிய கமிஷனர் பேட்டி


உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் - வேலூர் மாநகராட்சி புதிய கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 7 Nov 2019 3:30 AM IST (Updated: 6 Nov 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்று புதிய கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

வேலூர்,

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் உள்ளவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

வேலூர் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த சிவசுப்பிரமணியன், திருச்சி மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சென்னை ஆவடி மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் பூந்தமல்லி, திருவேற்காடு, குமாரபாளையம், தாம்பரம், ராசிபுரம் நகராட்சிகளில் கமிஷனராக பணிபுரிந்துள்ளார். ஆவடி நகராட்சி கமிஷனராக இருந்தபோது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அங்கு 3 மாதங்கள் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்து மாறுதலாகி வந்துள்ளார். அவரை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வேலூர் மாநகராட்சியில் பொதுசுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெறும் பணிகள்குறித்து ஆய்வு செய்து பணிகள் விரைவுப்படுத்தப்படும். அரசு அறிவிக்கும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியிலும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story