விக்கிரமசிங்கபுரம்-செங்கோட்டை பகுதி தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்


விக்கிரமசிங்கபுரம்-செங்கோட்டை பகுதி தோட்டங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 7 Nov 2019 3:30 AM IST (Updated: 6 Nov 2019 11:28 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் மற்றும் செங்கோட்டை பகுதியில் யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டி. விவசாயி. இவருக்கு சொந்தமான வயல்கள் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. அங்கு அவர் தென்னை, வாழை, கரும்பு ஆகியவை பயிரிட்டிருந்தார்

இந்த நிலையில் சம்பவத்தன்று ஒரு குட்டி யானை மற்றும் 4 யானைகள் பாண்டிக்கு சொந்தமான வயல்களுக்குள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த தென்னை, வாழை, கரும்பு ஆகியவற்றை நாசப்படுத்தின. இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் வனத்துறையினர் ஒரு குழு அமைத்து இரவு முழுவதும் சப்தங்கள் எழுப்பி யானைகளை காட்டுக்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.

இதேபோன்று செங்கோட்டை அருகே வடகரையில் ரகுமானியாபுரத்தை சேர்ந்த சாகுல்அமீதுக்கு புலி ஓடை பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் ஒற்றை காட்டு யானை புகுந்து தென்னை மரக்கன்றுகளை பிடுங்கி எரிந்தும், காய்கறி பயிர்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து விட்டு சென்றுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, விக்கிரமசிங்கபுரம், செங்கோட்டை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அடிக்கடி யானை, கரடி, மான்கள் போன்ற வனவிலங்குகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் வன விலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story