நெல்லிக்குப்பம் அருகே, புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - தலை தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் விபரீத முடிவு


நெல்லிக்குப்பம் அருகே, புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - தலை தீபாவளி கொண்டாட வந்த இடத்தில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 2019-11-07T02:00:16+05:30)

நெல்லிக்குப்பம் அருகே தலை தீபாவளி கொண்டாட பெற்றோர் வீட்டுக்கு வந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லிக்குப்பம்,

புதுச்சேரி மாநிலம் வடபுரம் கீழ்பாதியை சேர்ந்த சாமிநாதன். இவரது மனைவி சவுமியா(வயது 25). இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது தலை தீபாவளியை கொண்டாடுவதற்காக சவுமியா, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் காமராஜர் நகரில் உள்ள தனது தந்தை சேகர் வீட்டுக்கு வந்தார்.

ஆனால் சாமிநாதன் அங்கு வரவில்லை. தீபாவளி முடிந்தும், சவுமியா தனது பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று மாலை சாமிநாதன் மற்றும் அவரது உறவினர்கள் எய்தனூரில் உள்ள சேகர் வீட்டுக்கு வந்து, அவரிடம் வாய்த்தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சவுமியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே திருமணமாகி 9 மாதங்களே ஆவதால், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். தலை தீபாவளி கொண்டாட பெற்றோர் வீட்டுக்கு வந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story