தேவேகவுடா தன்னுடன் செல்போனில் பேசினாரா? முதல்-மந்திரி எடியூரப்பா பதில்
தேவேகவுடா தன்னுடன் செல்போனில் பேசியதாக வெளியான தகவலுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்துள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
முன்னாள் பிரதமர் தேவேகவுடா என்னிடம் செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மைக்கு புறம்பானது. அவர் மூத்த அரசியல்வாதி. எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் இதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை. நான் தேவேகவுடாவின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சி தனது கொள்கைப்படி அரசியல் செய்து வருகிறது.
தகுதி நீக்க எம்.எல்.ஏ. நாராயணகவுடா, ராஜினாமா செய்வதற்கு முன்பு என்னை சந்தித்து பேசியதாக கூறியிருக்கிறார். இதுபற்றி நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. யாதகிரி சப்-இன்ஸ்பெக்டரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேவேகவுடா வலியுறுத்தினார்.
அவரது கோரிக்கையை ஏற்று அந்த சப்-இன்ஸ்பெக்டரை வேறு இடத்திற்கு மாற்றி, கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளேன். இந்த நடவடிக்கை மூலம் தேவேகவுடா திருப்தி அடைந்திருப்பார் என்று கருதுகிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய ஆடியோ பகிரங்கமாகி அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன் கொண்டுவர தடை விதித்து எடியூரப்பா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த நிலையில் முதல்-மந்திரியின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவிலும், செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story