தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆடியோ விவகாரம்; எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படையில் புகார்
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சியில் அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து மும்பையில் போய் தங்கினர். இதனால் கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. அதன்பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் சமீபத்தில் உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானது.
அதில், ‘ஆபரேஷன் தாமரை திட்டம் நமது கட்சியின் தேசிய தலைவரின் மேற்பார்வையில் நடைபெற்றது. அவருடைய உத்தரவுப்படி 17 எம்.எல்.ஏ.க்களும் மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்களின் தியாகத்தால் தான் பா.ஜனதா ஆட்சி அமைத்தது. அதனால் அவர்களுக்கு பா.ஜனதா சார்பில் இடைத்தேர்தலில் டிக்கெட் வழங்கப்படும்’ என்று கூறியிருந்தார். இதன்மூலம் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தலைவர்கள் ராஜினாமா செய்ய வைத்தது உறுதியாகியதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக கவர்னர் வஜூபாய் வாலாவிடமும் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக சமூக ஆர்வலர் என்.ஹனுமேகவுடா பெங்களூரு ஊழல் தடுப்புபடையில் புகார் செய்துள்ளார்.
அந்த புகாரில், ‘17 எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேரத்தில் ஈடுபட்டு பண ஆசை காண்பித்து பா.ஜனதா தலைவர்கள் மும்பை அழைத்து சென்றுள்ளனர். இதற்கான ஆடியோ வெளியாகி உள்ளது. பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதனால் எடியூரப்பா உள்பட பா.ஜனதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story