முகமூடி அணிந்து வந்து சந்தித்த அமைச்சர்கள் பட்டியலை வெளியிட தயாரா? - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேள்வி


முகமூடி அணிந்து வந்து சந்தித்த அமைச்சர்கள் பட்டியலை வெளியிட தயாரா? - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேள்வி
x
தினத்தந்தி 7 Nov 2019 4:30 AM IST (Updated: 7 Nov 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

முகமூடி அணிந்து வந்து சந்தித்த அமைச்சர்கள் பட்டியலை வெளியிட தயாரா? என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்த 3 ஆண்டு ஆகிறது. இதுவரை அமைச்சர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று அவரை சந்திக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எழுத்து பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ உத்தரவு போடவில்லை.

இந்த நிலையில் கவர்னர் மாளிகைக்கு அமைச்சர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து கொண்டு தன்னை அமைச்சர்கள் சந்திக்க வருவதாகவும், இதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறி செல்வதாகவும் கவர்னர் கிரண்பெடி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

எனக்கு தெரிந்து எந்த அமைச்சரும் இரவு நேரங்களில் கவர்னர் மாளிகைக்கு சென்றதாக தெரியவில்லை. அப்படி அமைச்சர்கள் யாராவது கவர்னரை சந்தித்து இருந்தால் அந்த விவரத்தை கவர்னர் வெளியிட வேண்டும். துறை ரீதியான பிரச்சினைக்காக தன்னை சந்தித்தார்களா? என்பதையும், எந்த தேதியில், எந்த நேரத்தில் என்ன காரணத்திற்காக சந்தித்தார்கள் என்ற விவரம் கொண்ட முழு பட்டியலையும் வெளியிட வேண்டும்.

புதுவையில் இதற்கு முன்பு இருந்த எந்த கவர்னரும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தரக்குறைவாக ஊடகங்களில் குற்றஞ்சாட்டியது இல்லை. முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக கவர்னர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

புதுவையை பொருத்தவரை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தங்களுடைய கடமையை சரியாக செய்து வருகின்றனர். ஆனால் அனைத்து நலத்திட்டங்களுக்கும் கவர்னர் கிரண்பெடி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு கவர்னர் கிரண்பெடி தான் 50 சதவீதம் காரணம்.

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜான் குமார் தேர்தல் பிரசாரத்தின் போது 21 நாட்கள் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக பிரசாரம் செய்தார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பதவியேற்பு விழாவிற்கு வரும்படி கவர்னருக்கு அழைப்பு விடுத்தது ஏன் என்று தெரியவில்லை. கவர்னரை, ஜான் குமார் சந்தித்து அழைத்தது தவறு.

கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் சுற்றுலா கண்காட்சி, கருத்தரங்குகள் தொடர்பான சுற்றுப்பயணங்கள் செல்ல அமைச்சர் என்கிற முறையில் எனக்கு அனுமதி அளிக்க கவர்னர் மறுக்கிறார். ஆனால் துறையின் செயலாளர், இயக்குனர்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்குகிறார். இது குறித்த கோப்புகள் தயார் நிலையில் வைத்துள்ளேன். விரைவில் பிரதமர், மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து புகார் செய்வேன்.

புதுவை அரசு பொது மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வாங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் ரூ.8 கோடி செலவில் அரசு பொது மருத்துவமனைக்கு புதிய எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி வாங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story