காருடன் தீயில் கருகிய புதுமாப்பிள்ளை சாவில் திடீர் திருப்பம்
காருடன் தீயில் கருகி புதுமாப்பிள்ளை இறந்த வழக்கில் அவர் தற்கொலை செய்துகொண்ட விவரம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை உழந்தைகீரப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 32). கார் டிரைவரான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர் நேற்று முன்தினம் காருக்குள் தீப்பிடித்து உடல் கருகி பிணமானார்.
இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் காரில் உள்ள ஏ.சி. மெஷின் தீப்பிடித்ததால் உடல் கருகி பலியாகி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்தநிலையில் முத்துக்குமரன் காருக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட தகவல் தற்போது தெரியவந்துள்ளது. அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லை இருந்துள்ளது. மேலும் காதல் தோல்வியும் ஏற்பட்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சோக நிகழ்வு நடக்க இருப்பதாக அவர் தனது நண்பர் ஒருவருக்கு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றினை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துக்குமரன் காருக்குள் அமர்ந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
காருக்குள்ளேயே பெட்ரோல் பாட்டில்களும் கிடந்துள்ளன. அவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story