முகநூல் உதவியால் 12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு


முகநூல் உதவியால் 12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 10:27 PM GMT)

12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் முகநூல் உதவியால் மீட்கப்பட்டார். நேற்று அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சேலம்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுடைய மகன் மனோகரன்(வயது 32). மனநிலை பாதித்த இவரை கடந்த 2007-ம் ஆண்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் திருச்செங்கோட்டில் சுற்றித்திரிந்த மனோகரனை ஒரு தனியார் தொண்டு் நிறுவனத்தினர் மீட்டனர். அப்போது அவருடைய வலது கை அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த தொண்டு நிறுவனத்தினர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

இந்த சம்பவம் குறித்து தொண்டு நிறுவன நிர்வாகிகள் முகநூலில் பதிவிட்டனர். அப்போது முகநூலில் மனோகரனின் புகைப்படத்தை மலேசியாவில் வசித்து வரும் அவருடைய உறவினர் ஒருவர் பார்த்தார். பின்னர் அவர் காணாமல் போன மனோகரன் பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் பேசினர்.

அப்போது அவர்கள் மனோகரனை நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறினர். அதன்படி அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் தனது மகன் மனோகரனை பார்த்தனர். உடனே அவர்கள் ஆனந்த கண்ணீருடன் தனது மகனை கட்டித்தழுவி முத்தமிட்டனர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. இதையடுத்து போலீஸ் உதவி கமி‌‌ஷனர் ஈஸ்வரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மனோகரனை 12 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அருள்வாக்கு

இதுகுறித்து மனோகரனின் பெற்றோர் கூறும் போது, ‘கடந்த 2007-ம் ஆண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மனோகரனை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது அவர் மாயமானார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். மேலும் அவரை பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வந்தோம். மகன் மாயமானது குறித்து கோவிலுக்கு சென்று அருள்வாக்கு கேட்ட போது, உங்கள் மகன் காலதாமதமாக கிடைப்பான் என்று கூறினர். அதை நம்பினோம். தற்போது தொண்டு நிறுவனம் மூலம் மனோகரன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்போம்’ என்றனர்.

இதையடுத்து அவர்கள் மகனுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story