திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: தி.மு.க. ஆர்ப்பாட்டம்
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்ததை கண்டித்து சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
திருவள்ளுவர் சிலைக்கு காவி வண்ணம் பூசி ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டதற்கும், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு சாணி அடித்து அவமதிப்பு செய்ததை கண்டித்தும், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் புலவர் இந்திரகுமாரி தலைமை தாங்கினார். சென்னை மேற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னுதங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் புலவர் இந்திரகுமாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளுவரை காவி வண்ணம் பூசி அவமதித்தது கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவர் சிலையை அவமதித்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து, கைது செய்ய தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால் தி.மு.க. இலக்கிய அணி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story