சினிமா காட்சி போல் சாலையில் ‘பல்டி’ அடித்துச்சென்று கன்டெய்னர் லாரியில் மோதிய கார்; வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்
அம்பத்தூர் அருகே வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சினிமா காட்சியை போல் சாலையில் உருண்டு ‘பல்டி’ அடித்தபடி சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பூந்தமல்லி,
சென்னை திருவேற்காடு வடநூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் லோகராஜ்(வயது 32). அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், தனது நண்பர்களான குரோம்பேட்டையைச்சேர்ந்த ஸ்ரீராம்(23), பம்மலை சேர்ந்த சத்யபிரகாஷ்(32) ஆகியோருடன் நேற்று அதிகாலையில் காரில் தாம்பரம்-புழல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். காரை லோகராஜ் ஓட்டினார்.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே வேகமாக சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு ‘பல்டி’ அடித்தபடி அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. சினிமா காட்சியைப்போல் நடைபெற்ற இந்த சம்பவத்தை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் காருக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே லோகராஜ் பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீராம் மற்றும் சத்யபிரகாஷ் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான லோகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story