சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து மின்னணு கழிவுகள் இறக்குமதி; தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மும்பை,
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக மின்னணு கழிவுகளை தனியார் நிறுவனம் ஒன்று நவிமும்பை நேரு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்வதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் காந்திவிலியை சேர்ந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்து பிவண்டி, பிம்பிரி போன்ற இடங்களில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் அந்த குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பிலான மின்னணு கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஹாங்காங், துபாய் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்த நிறுவன உரிமையாளர் பாவிக் மேத்தா மற்றும் ஜூயு நகரை சேர்ந்த ஏஜெண்டு சாகர் பங்கார் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் மின்னணு கழிவுகள் இறக்குமதி செய்ய தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story