மாவட்ட செய்திகள்

சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்று சரத்பவார் அறிவிப்பு; ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிரம் + "||" + Sharad Pawar announces not support for Shiv Sena; Ba Janatha intensifies to rule

சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்று சரத்பவார் அறிவிப்பு; ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிரம்

சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்று சரத்பவார் அறிவிப்பு; ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிரம்
சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்று சரத்பவார் அறிவித்ததன் மூலம் மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட இழுபறி முடிவுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டியுள்ள பா.ஜனதாவினர் கவர்னரை இன்று சந்திக்கின்றனர்.
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றது.

இதனால் இந்த கூட்டணி பிரச்சினை இன்றி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் இதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டது.

இரு கட்சிகளின் தொடர் பிடிவாதம் காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் ஆன போதிலும், மராட்டியத்தில் இன்னும் புதிய அரசு அமையவில்லை.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. சிவசேனா திட்டம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த 4-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

பின்னர் சரத்பவார் நிருபர்களிடம் பேசுகையில், மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதற்கான பொறுப்பு பாரதீய ஜனதாவுக்குத்தான் உள்ளது என்றும், தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்குத்தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்றும் கூறினார். இது சிவசேனாவுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.

இந்த சந்திப்புக்கு மறுநாள், சிவசேனா முதலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அந்த கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரி அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கூறியது.

இந்த நிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் நாக்பூர் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். அப்போது, ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று மோகன் பகவத்தை அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தேசியவாத காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பம் இருந்து வந்த நிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று மும்பையில் சரத்பவாரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த சரத்பவார், ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் 25 ஆண்டுகாலமாக கூட்டணி கட்சிகளாக உள்ளன. அவர்கள் கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ ஒன்று சேர்ந்து விடுவார்கள். எனவே அந்த கூட்டணிதான் ஆட்சி அமைக்க வேண்டும். புதிய அரசை அமைக்க விரைவில் அவர்கள் முன்வர வேண்டும். மாநிலத்தில் அரசியலமைப்பு குளறுபடிக்கு வழிவகுக்க கூடாது. எங்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லை.

எங்களிடம் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை இருந்து இருந்தால் நாங்கள் யாரையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நாங்கள் 100 இடங்களைகூட தாண்டவில்லை. எனவே தேசியவாத காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும். நான் 4 முறை முதல்-மந்திரியாக இருந்துவிட்டேன். எனவே அந்த பதவியின் மீது எனக்கு ஆர்வம் இல்லை. காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதீய ஜனதா-சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று சரத்பவார் கூறியது பற்றி சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, ‘‘சரத்பவார் சொல்வது சரிதான். 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கட்டும்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

சரத்பவாரின் இந்த அறிவிப்பை பாரதீய ஜனதா வரவேற்று உள்ளது.

பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதை தவிர சிவசேனாவுக்கு வேறு வழி இல்லை என்று இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) கூறி இருக்கிறது.

இந்த நிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை, சிவசேனா மந்திரிகள் 6 பேர் நேற்று திடீரென சந்தித்து பேசினர். அப்போது ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நீடித்து வரும் இழுபறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரசின் ஆதரவு இல்லை என்பது தெளிவாகிவிட்டதால், ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாரதீய ஜனதா மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. மராட்டிய மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பட்டீல் தலைமையிலான குழுவினர், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஒப்புதல் அளிக்கப்பட்ட கடிதத்துடன் சென்று மாநில கவர்னர் பகத் சிங் கோ‌‌ஷ்யாரியை இன்று (வியாழக்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள்.

இந்த தகவலை பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுதிர் முங்கண்டிவார் நேற்று மும்பையில் தெரிவித்தார்.

தற்போதைய மராட்டிய சட்டசபையின் பதவிக்காலம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முடிவடைகிறது. எனவே அதற்குள் புதிய அரசு பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு அளிப்பது குறித்து சிவசேனா இன்று முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

பா.ஜனதா- சிவசேனா இடையே உடன்பாடு?

இதற்கிடையே மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு இல்லை என்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் முடிவை பாரதீய ஜனதா வரவேற்று உள்ளது. பாரதீய ஜனதா தலைவர்கள் இன்று (வியாழக்கிழமை) கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க உள்ளனர்.

ஆனால் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பாரதீய ஜனதாவிடம் இருந்து எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், “நாங்களும் கவர்னரை சந்தித்தோம். இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலேயும் சந்தித்தார். பா.ஜனதா தலைவர் கவர்னரை சந்திக்கிறார்கள் என்றால், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் அவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும்” என்றார்.

சிவசேனா இப்படி கூறினாலும் திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஆட்சி அமைப்பதில் பாரதீய ஜனதாவுடன் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வருகிற 9-ந் தேதிக்குள் பாரதீய ஜனதா தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என்று தெரிகிறது.

ஆனால், ஆட்சியில் சிவசேனாவுக்கு வழங்கப்படும் அதிகாரப்பகிர்வு குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி தீர்ப்புக்கு சரத்பவார் வரவேற்பு ‘மராட்டிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது' என பேட்டி
அயோத்தி தீர்ப்பை வரவேற்று உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தீர்ப்பு மராட்டிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்.
2. ‘காங்கிரஸ் பலவீனம் அடையவில்லை, ஆக்ரோஷமாக செயல்படுகிறது’ பா.ஜனதாவுக்கு சரத்பவார் பதிலடி
“காங்கிரஸ் பலவீனம் அடையவில்லை, ஆக்ரோஷமாக செயல்படுகிறது” என பா.ஜனதாவின் குற்றச்சாட்டுகளுக்கு சரத்பவார் பதிலடி கொடுத்தார்.
3. ‘சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்கால் வேதனை அடைந்தேன்’ எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா குறித்து அஜித்பவார் உருக்கம்
‘‘சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததால் வேதனை அடைந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன்’’ என அஜித்பவார் உருக்கமாக கூறினார்.
4. சரத்பவார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் முடிவை கைவிட்டார்
மும்பை போலீஸ் கமிஷனரின் கோரிக்கையை ஏற்று சரத்பவார் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்லவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. 'இப்போதைக்கு வரத் தேவையில்லை' -சரத்பவாருக்கு அமலாக்கத்துறை தகவல்
'இப்போதைக்கு வரத் தேவையில்லை' என சரத்பவாருக்கு அமலாக்கத்துறை மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை