உரிமம் பெறாமல் விதைகள்-நாற்றுகள் விற்றால் சிறை தண்டனை அதிகாரி எச்சரிக்கை


உரிமம் பெறாமல் விதைகள்-நாற்றுகள் விற்றால் சிறை தண்டனை அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2019 11:00 PM GMT (Updated: 7 Nov 2019 4:24 PM GMT)

உரிமம் பெறாமல் விதைகள்-நாற்றுகள் விற்பனை செய்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையில் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளை கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனரக விதை ஆய்வு இணை இயக்குனர் முகைதீன் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு விதை ஆய்வாளர்கள் விதை விற்பனை நிலைய ஆய்வு மற்றும் விதைமாரிகள் எடுக்கும் பணிகளை விடுதலின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

சிறை தண்டனை

தொடர்ந்து கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு, கொள்முதல் பதிவேடுகள், விற்பனை ரசீது மற்றும் பதிவு சான்றுகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது விதைகள் விற்பனை செய்யப்படும் போது பயிர் ரகம், குவியல் எண் மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு ரசீது வழங்க வேண்டும்.

விதை உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்பவர்கள் மீது விதை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். ஆய்வின்போது கரூர் விதை ஆய்வு துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், கரூர் விதை ஆய்வாளர் குமரவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story