தனியார் வங்கியில் பணம் செலுத்தும் எந்திரத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை செலுத்திய வியாபாரி


தனியார் வங்கியில் பணம் செலுத்தும் எந்திரத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை செலுத்திய வியாபாரி
x
தினத்தந்தி 7 Nov 2019 10:45 PM GMT (Updated: 7 Nov 2019 5:34 PM GMT)

தனியார் வங்கியில் பணம் செலுத்தும் எந்திரத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை செலுத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை பூக்கடை ஆவுடையப்பன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் கன்காரியா(வயது 42). இவர், கொத்தவால்சாவடி பகுதியில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர், அதே பகுதியில் கோவிந்தப்பன்தெருவில் உள்ள ஒரு வங்கியில், பணம் செலுத்தும் எந்திரம் வழியாக 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.40 ஆயிரத்தை செலுத்தினார்.

ஆனால் அதில், ரூ.2,500 மதிப்பிலான ஐந்து 500 ரூபாய் நோட்டுகள், கள்ளநோட்டுகள் என்பதை வங்கி ஊழியர்கள் கண்டுபிடித்தனர். பணம் செலுத்தும் எந்திரத்தில் அதை செலுத்தியது யார்? என ஆய்வு செய்தபோது அது வியாபாரி சந்திரபிரகாஷ் என்பது உறுதியானது.

இதுபற்றி வங்கி மேலாளர் சேக் சுலைமான், கொத்தவால்சாவடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரி சந்திரபிரகாசை பிடித்து விசாரித்தனர். அவர், கள்ளநோட்டுகள் எப்படி வந்தது? என தனக்கு தெரியாது என்றார். எனினும் கள்ளநோட்டுகள் வைத்து இருந்ததாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர், செலுத்திய ரூ.40 ஆயிரத்தில் ரூ.2,500 கள்ளநோட்டுகளை தவிர்த்து மீதம் உள்ள பணத்தையும் வங்கி அதிகாரிகள் தனியாக எடுத்து வைத்து உள்ளனர். அவையும் கள்ளநோட்டுகளாக இருக்கலாமோ? என்ற சந்தேகத்தின்பேரில் அந்த பணத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை சென்டிரல், கொத்தவால்சாவடி, பாரிமுனை ஆகிய பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கடந்த சில நாட்களாக கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. இதை யார் புழக்கத்தில் விடுகிறார்கள்?, இவை எங்கிருந்து வருகிறது? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story