எமரால்டில் மாணவர் விடுதி அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


எமரால்டில் மாணவர் விடுதி அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2019 3:45 AM IST (Updated: 8 Nov 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

எமரால்டில் மாணவர் விடுதி அமைக்க வேண்டும் என்று அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மஞ்சூர்,

மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு. இதன் சுற்றுவட்டாரத்தில் எமரால்டு வேலி, காட்டுக்குப்பை, அண்ணாநகர், ரெட்ஹில் எஸ்டேட், அவலாஞ்சி, லாரன்ஸ், குட்டிமணி நகர், நேரு நகர், நேருகண்டி, கோத்தகண்டி வ.உ.சி.நகர், எம்.ஜி.ஆர். நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. எமரால்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் ஆவர். இது மட்டுமின்றி எமரால்டு அருகில் உள்ள முள்ளிமந்து, கரிகாடு ஆகிய கிராமங்களில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எமரால்டு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் குழந்தைகள் தினமும் 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து வந்து, படித்து செல்கின்றனர்.

இதனால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க எமரால்டில் மாணவர் விடுதி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து காட்டுக்குப்பை, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

எங்களது குழந்தைகள் எமரால்டில் உள்ள அரசு பள்ளிக்கு தினமும் சென்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. குறிப்பாக பள்ளி முடிந்து அவர்கள் வீடுகளுக்கு வர மாலை நீண்ட நேரமாகிறது.

வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசித்து வரும் நாங்கள், குழந்தைகள் நல்லபடியாக வீடுகளுக்கு வருவார்களா? என்று தினமும் எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. வனவிலங்குகள் நடமாட்டம், நீண்ட தொலைவுக்கு பயணம் உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளால் சரிவர படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனவே அவர்களின் நலன் கருதி எமரால்டில் மாணவர் விடுதி அமைக்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story