பைக்காரா அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்


பைக்காரா அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 8 Nov 2019 3:15 AM IST (Updated: 8 Nov 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

பைக்காரா அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா உள்பட 10-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா ஆகிய அணைகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் அமைந்து உள்ளன. குறிப்பாக ஊட்டி அருகே பைக்காரா பகுதியில் அமைந்து உள்ள அணை 100 அடி உயரம் கொண்டது.

இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்கு பிறகு வெளியேற்றப்படும் தண்ணீரானது பைக்காரா நீர்வீழ்ச்சி வழியாக மாயார் ஆற்றுக்கு செல்கிறது.

இந்த நீர்வீழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் அவர்களுக்காக பைக்காரா அணையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு சவாரி இயக்கப்படுகிறது. நீலகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பைக்காரா படகு இல்லம் திகழ்வதால், அங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக 20 மோட்டார் படகுகள், 5 அதிவேக மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. 8 இருக்கைகள் கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.815, 10 இருக்கைகளுக்கு ரூ.935, அதிவேக மோட்டார் படகுக்கு(2 அல்லது 3 பேர்) ரூ.840 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அணையில் 96 அடி உயரத்துக்கு நீர்மட்டம் இருக்கிறது. இதனால் படகு இல்லத்தின் படிக்கட்டுகள் பாதி தண்ணீரில் மூழ்கி இருப்பதோடு, தண்ணீர் நீல நிறத்தில் கடல்போல் காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் தற்போது படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வார விடுமுறை நாட்கள் மட்டும் அல்லாமல் மற்ற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட் டத்தை காண முடிகிறது. சிறிய மலை குன்றுகள், தீவு போல காணப்படும் அணைப்பகுதி, அடர்ந்து வளர்ந்த மரங்களை கொண்ட வனப்பகுதி வழியாக படகு சவாரி செய்வது அவர்களது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. சில சமயங்களில் கடமான், சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் தண்ணீர் அருந்துவதை பார்க்க வாய்ப்பு உள்ளது. ரம்மியமாக உள்ள அணையில் தண்ணீரை கிழித்துக்கொண்டு அதிவேகமாக செல்லும் படகில் சுற்றுலா பயணிகள் செல்வது, அவர்களுக்கு புது அனுபவம் கிடைக்கிறது.

அங்கேயே கேண்டீன், பார்க்கிங் வசதி உள்ளது. பைக்காரா நீர்வீழ்ச்சியையும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்கின்றனர்.

Next Story