குடியிருப்பு பகுதிகளில் பெருகும் டாஸ்மாக் கடைகள்: மதுவால் பாதை மாறி போதையில் மூழ்கும் மனித சமுதாயம்
குடியிருப்பு பகுதிகளில் பெருகும் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவால் பாதை மாறி போதையில் மனித சமுதாயம் சீரழிந்து வருகிறது.
திண்டுக்கல்,
மயக்கும் விஷயங்கள் ஆயிரம் இருந்தாலும், மதுவில் மயங்குவோர் அதிகம். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உற்சாக கொண்டாட்டம், துக்க நிகழ்ச்சி, பொழுதுபோக்கு என அனைத்திலும் மது முக்கிய விருந்தாளியாகி விட்டது. மதுக்கடைக்கு இளைஞர்களே செல்ல தயங்கிய காலம் மாறி, 18 வயது கூட நிரம்பாத சிறுவர்களும் டாஸ்மாக் கடை வாசலில் தவம் கிடக்கின்றனர்.
இதன் விளைவு அரசு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதை பார்க்க முடிகிறது. சினிமா தியேட்டர்களில் கூட அந்த அளவுக்கு கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் மதுக்கடைகளால் மதுவிற்பனை மூலம் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு 160 டாஸ்மாக் கடைகள் இருந்தன. கோர்ட்டு உத்தரவு எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதேபோல் பல்வேறு பகுதிகளில் மக்களின் எதிர்ப்பு காரணமாகவும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுக்கடைகளின் எண்ணிக்கை 70 ஆக குறைந்தது.
அதன்பின்னர் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பஸ்நிலையம், மார்க்கெட், கடைவீதிகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளை குறிவைத்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது.
இதில் திண்டுக்கல்லில் மட்டும் 20 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதிலும் மதுவை ஒழிக்க போராடிய பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் அமைந்த திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதேபோல் ரெயில் நிலையம், பஸ்நிறுத்தம், தினசரி மற்றும் வாரச்சந்தை, கோவில்கள், பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள நாகல்நகரிலும் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் என்பதால் இந்த கடைகளில் மதுவிற்பனை அதிகமாக உள்ளது. அதிலும் ஒருசில கடைகளில் தினமும் ரூ.5 லட்சம் வரை மதுபானம் விற்பனை நடப்பதாக தெரிகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் சராசரியாக ரூ.3 கோடிக்கு மதுபானம் விற்பனை நடக்கிறது. இது அரசுக்கு கிடைக்கும் வருவாய் தான்.
ஆனால், வயதானவர்கள் மட்டுமே வந்து செல்லும் இடமாக இருந்த மதுக்கடைகளுக்கு, சிறுவர்களும் வரத் தொடங்கி விட்டனர். இதில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களும் இருப்பது பெரும் வேதனையானது. இதனால் ஒரு தலைமுறையே தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாகி சீரழிவதால், அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட வழிவகுத்து விடும்.
இதுஒருபுறம் இருக்க தற்போது பலர் சாலையோரத்தில் அமர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பஸ்நிலையம், நாகல்நகரில் தினமும் அதுபோன்ற காட்சிகளை பார்க்கலாம். அதுமட்டுமின்றி போதை தலைக்கேறியதும் வீட்டுக்கு செல்ல முடியாமல் வழியிலேயே பஸ்நிலையம், சாலையோரங்களில் விழுந்து கிடப்பது தினமும் நடக்கிறது. திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தினமும் குறைந்தது 5 பேராவது மதுபோதையில் விழுந்து கிடக்கின்றனர்.
ஆடைகள் விலகி அலங்கோலமான நிலையில் சிலர் விழுந்து கிடக்கிறார்கள். இதனால் பெண் பயணிகள் பெரும் தர்மசங்கடத்தை சந்திக்க நேரிடுகிறது. அதுவே நகருக்கு வெளியே டாஸ் மாக் கடைகள் இருந்தால், போதையில் அங்கேயே விழுந்து கிடப்பார்கள். அதனால், யாருக் கும் தொந்தரவு வராது. எனவே, நகருக்குள் இருக்கும் மதுக்கடைகளை புறநகர் பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். அதேபோல் அடுத்த தலைமுறையை காப்பாற்றும் வகையில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதும் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story