கடன் தொல்லையால் பரிதாபம்: கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது


கடன் தொல்லையால் பரிதாபம்: கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 8 Nov 2019 5:15 AM IST (Updated: 8 Nov 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் வசித்து வந்தவர் சந்திரன் (வயது 64). இவருடைய மனைவி விஜயலட்சுமி (60). இவர்களுக்கு அரிபிரசாத் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சந்திரன் மற்றும் விஜயலட்சுமி மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

நேற்று மதியம் இவர்களது வீட்டில் வேலை செய்யும் சித்ரா என்பவர் சந்திரன் வீட்டுக்கு வந்தார். கதவு திறந்தே கிடந்தது. வீட்டின் உள்ளே சென்ற சித்ரா, படுக்கை அறையில் நைலான் கயிற்றால் சந்திரன், அவருடைய மனைவி விஜயலட்சுமி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் உதவி சப்- இன்ஸ்பெக்டர்கள் சஜிபா, சாந்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், முதலில் மயிலாப்பூரில் வசித்துவந்த சந்திரன், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வசதியாக வாழ்ந்து வந்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட கடன் சுமையால், சொந்த வீட்டை கடனாளிகளிடம் கொடுத்துவிட்டு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஓட்டேரியில் உள்ள இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர், இந்த தற்கொலை முடிவை எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

முன்னதாக அவரது வீட்டில் சோதனை செய்தபோது, சந்திரன் தனது மகன், மகள் மற்றும் போலீசாருக்கு தனித்தனியாக கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

அதில், “நான் வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டுமே மாதா மாதம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக கொடுத்து வந்தேன். தொடர்ந்து வட்டியும், அசலையும் கொடுக்க முடியாத விரக்தியில் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள், எங்கள் மகன் மற்றும் மகளிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்க வேண்டாம்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடன்தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story