சின்னசேலம் பகுதியில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி ரூ.50 கோடி மோசடி - 2 பேர் கைது; கார், பணம் பறிமுதல்


சின்னசேலம் பகுதியில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி ரூ.50 கோடி மோசடி - 2 பேர் கைது; கார், பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Nov 2019 4:15 AM IST (Updated: 8 Nov 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் பகுதியில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி ரூ.50 கோடி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் மூங்கில்பாடி செல்லும் சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை சின்னசேலம் அருகே உள்ள நாகுப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 31), ஈரியூரை சேர்ந்த அழகேசன் (30), செந்தில்குமார் (44), சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை மெயின்ரோட்டை சேர்ந்த சுரே‌‌ஷ்கண்ணா (41), தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (40), சின்னசேலம் வேலாயுதம் (40) ஆகியோர் நடத்தி வந்தனர்.

இவர்கள் 6 பேரும் சேர்ந்து சின்னசேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் சென்று தங்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் 10 வாரங்கள் முடிவடைந்தவுடன் அந்த தொகைக்கு இரட்டிப்பு தொகையாக தருவதாக கூறியுள்ளனர்.

இதற்காக அவர்கள், 37 முகவர்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்கள் மூலமாக பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். பொதுமக்களும், 10 வாரங்களிலேயே தங்களுக்கு இரட்டிப்பு தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டியுள்ளனர்.

ஆனால் 10 வாரங்கள் கழித்த பிறகும் அந்த நிறுவனத்தினர், சம்பந்தப்பட்டவர்களுக்கு இரட்டிப்பு தொகையை கொடுக்கவில்லை. இதனால் பணம் கட்டிய பொதுமக்கள், அந்த நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது வெங்கடேசன் உள்ளிட்ட 6 பேரும் அந்த நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தனர்.

இதையடுத்து அந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், சுப்பையா, பாலசிங்கம், நேவிஸ்அந்தோணிரோஸி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெங்கடேசன் உள்பட 6 பேரும் சேர்ந்து முகவர்கள் மூலமாக சின்னசேலம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.50 கோடி வரை வசூல் செய்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று வெங்கடேசன், சுரே‌‌ஷ்கண்ணா ஆகிய இருவரும் வெளியூருக்கு தப்பிச்செல்வதற்காக மாடூர் சுங்கச்சாவடி அருகே காரில் சென்று கொண்டிருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே இதுபற்றி கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதனுக்கு தகவல் தெரிவித்து, சின்னசேலம் போலீசாரின் உதவியுடன் வெங்கடேசன், சுரே‌‌ஷ்கண்ணா ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த கார், அதில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய அழகேசன், செந்தில்குமார், செல்வம், வேலாயுதம் ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story