பள்ளி கல்வித்துறை சார்பில் சேலத்தில் மாநில கலைவிழா போட்டிகள்


பள்ளி கல்வித்துறை சார்பில் சேலத்தில் மாநில கலைவிழா போட்டிகள்
x
தினத்தந்தி 8 Nov 2019 4:15 AM IST (Updated: 8 Nov 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி கல்வித்துறை சார்பில் சேலத்தில் மாநில அளவிலான கலைவிழா போட்டிகள் நடைபெற்றது.

சேலம்,

இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வி மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இசை, நடனம் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகையான தனியார் பள்ளிகள் கலந்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் ஏற்கனவே மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு தற்போது 2 நாட்கள் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் நேற்று மாநில அளவிலான (கலா உத்சவ்-2019) கலைவிழா போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை சென்னை ஒருங்கிணைந்த கல்வி கூடுதல் திட்ட இயக்குனர் குப்புசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மாநில திட்ட அலுவலர் அய்யாராஜூ, சோனா கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

320 மாணவ, மாணவிகள்

இதில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 32 மாவட்டங்களில் இருந்து 320 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இசை (வாய்ப்பாடு மற்றும் கருவி), நடனம் மற்றும் வண்ண ஓவியம் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக தனித்திறமையை வெளிப்படுத்தக்கூடிய நடனப்போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பரதநாட்டியம், கிராமப்புற நடனம், காவடி ஆட்டம் என பல்வேறு இசை மற்றும் பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

இதேபோல், இசை மற்றும் வண்ண ஓவியம் வரைதல் போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) கலைவிழா போட்டிகள் நடைபெறுகிறது. முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்து தேசிய அளவில் நடக்கும் தேசிய கலைவிழா போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கலைவிழா போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.


Next Story