பாலூரு, சட்டனஹடலு, பலிகே ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேல்-சபை தலைவர் ஆய்வு
பாலூரு, சட்டனஹடலு, பலிகே ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேல்-சபை தலைவர் பிரதாப் சந்திரசெட்டி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலூரு, சட்டனஹடலு, பலிகே ஆகிய கிராமங்களுக்கு நேற்று மேல்-சபை தலைவர் பிரதாப் சந்திரசெட்டி வந்தார். அவர் அந்த கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங் களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளுடன் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழைக்கு பிறகும் சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சிக்கமகளூரு மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்ட பாலூரு, சட்டனஹடலு, பலிகே உள்ளிட்ட கிராமங்கள் தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன. இந்த கிராமங்களுக்காக அமைக்கப்பட்டு உள்ள சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இங்குள்ள மக்கள் நகர் பகுதிகளுக்கு வரவேண்டும் என்றால் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த 3 கிராமங்களிலும் விவசாய பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. நான் தற்போது சேத மதிப்புகள் குறித்து ஆய்வு செய்தேன். இதேபோல் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறேன்.
என்னுடைய ஆய்வை விரைவில் முடித்துக்கொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன். இதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story