மேம்பால பணி நடக்கும் இடத்தில் தற்காலிக பாதை அமைப்பது குறித்து ரெயில்வே அதிகாரிகளுடன் எம்.பி. ஆய்வு


மேம்பால பணி நடக்கும் இடத்தில் தற்காலிக பாதை அமைப்பது குறித்து ரெயில்வே அதிகாரிகளுடன் எம்.பி. ஆய்வு
x
தினத்தந்தி 8 Nov 2019 11:00 PM GMT (Updated: 8 Nov 2019 5:03 PM GMT)

கார்த்திகை தீப திருவிழா சமயத்தில் நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே மேம்பால பணிகள் நடக்கும் இடத்தில் மாற்றுப்பாதை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் சி.என்.அண்ணாதுரை எம்.பி.ஆய்வு நடத்தினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. மகாதீபம் ஏற்றப்படும்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர உள்ளனர்.

தற்போது திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வழக்கமான போக்குவரத்து, மாற்றுப்பாதையில் நடைபெற்று வருகிறது.

தீபத் திருவிழாவை முன்னிட்டு தற்போதுள்ள மாற்றுப்பாதையில் நெரிசல் ஏற்படலாம் என்பதால், ரெயில்வே மேம்பாலம் அமையும் இடத்தில் தற்காலிக பாதை அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ரெயில்வே கட்டுமான பணிகளின் துணை முதன்மை பொறியாளர் கொண்டப்பநாயுடு, செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், முதுநிலை பகுதி பொறியாளர்கள் தமிழழகன், மனோகரன், திருவண்ணாமலை டவுன் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோருடன் சி.என்.அண்ணாதுரை எம்.பி.நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று கடந்த வாரம் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தீபத்திருவிழாவை முன்னிட்டு 20 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். நகரில் அனைத்து வழித்தடங்களும் பயன்படும் வகையில் உள்ளது. ஆனால் திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி நடைபெறுவதால், அந்த பாதையை தற்காலிகமாக பயன்டுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அப்பாதையை பயன்படுத்த திறக்க வேண்டுமென்று ரெயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். ரெயில்வே பாலம் கட்டும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. அங்கு பணி நடைபெறுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம், தரையளவிற்கு மூடப்பட்டால் தான், தற்காலிக பாதை உருவாக்க முடியும்.

தீபத்திருவிழாவிற்காக திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக பாதை அமைத்து கேட் ஏற்படுத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரி உறுதியளித்துள்ளார். இரவு, பகல் பாராமல் ஒரு வார காலத்திற்குள் இப்பணியை முடித்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த பணி முடிவடைந்தவுடன் ‘ரெயில்வே ஆபரேடிங்’ துறையில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து, இந்த தற்காலிக கேட் திறக்கப்படும். இந்த கேட் 10 அல்லது 15 நாட்களுக்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், முன்னாள் அறங்காவலர் சீனுவாசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜாங்கம் உள்பட பலர் இருந்தனர்.

Next Story