சொத்து தகராறில் தொழிலாளி கொலை: அண்ணன் மகன் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை


சொத்து தகராறில் தொழிலாளி கொலை: அண்ணன் மகன் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 9 Nov 2019 4:00 AM IST (Updated: 8 Nov 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே சொத்து தகராறில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில், அவருடைய அண்ணன் மகன் உள்பட 2 பேருக்கு, திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள சீலப்பாடியான்களம் பகுதியை சேர்ந்தவர் சுப்புக்காளை (வயது 65). கூலித்தொழிலாளி. இவருடைய அண்ணன் அய்யாமலையின் மகன் வீரமணி (34). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீரமணி தனது மைத்துனர் அன்புசுந்தரம் (36) என்பவருடன், சுப்புக்காளையின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு வீரமணி சொத்தில் தனக்கு பங்கை பிரித்து தரும்படி, சித்தப்பா சுப்புக்காளையிடம் கேட்டார். இதற்கு சுப்புக்காளை மறுப்பு தெரிவிக்கவே, 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வீரமணி மற்றும் அன்புசுந்தரம் ஆகியோர் சுப்புக்காளையை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிவிட்டனர். இதில் சுப்புக் காளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணி, அன்புசுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி இளங்கோவன் இந்த வழக்கை விசாரித்தார். இதில் அரசு தரப்பில் மொத்தம் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை அடுத்து, நீதிபதி இளங்கோவன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட வீரமணி, அவருடைய மைத்துனர் அன்புசுந்தரம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story