கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2019 11:30 PM GMT (Updated: 8 Nov 2019 6:06 PM GMT)

கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

துமகூரு சித்தகங்கா மடாதிபதியான 111 வயது சிவக்குமாரசாமி கடந்த 2018-ம் ஆண்டு மரணமடைந்தார். இந்த நிலையில் சிவக்குமார சுவாமியின் சொந்த ஊரான மாகடி தாலுகாவில் உள்ள வீராப்புராவில் அவரது சிலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, 111 அடி உயர சிவக்குமார சுவாமி சிலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது எடியூரப்பா பேசியதாவது:-

பசி என்று வந்தவர்களுக்கு உணவு கொடுத்தவர் சிவக்குமார சுவாமி. அவர் பிறந்த ஊரில் நீங்கள் பிறந்தது உங்களுக்கு கிடைத்த புண்ணியம். நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்ந்தவர். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த சிலை அமைக்கும் பணிகள் முடிவடையும். ரூ.80 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்படுகிறது.

கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்று டி.கே.சுரேஷ் எம்.பி. கேட்டுள்ளார். டி.கே.சிவக்குமார் எனது நண்பர். அதனால் கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். அதிகாரிகளின் ஆலோசனையுடன் இதற்கான இடம் கண்டறியும் பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், டி.கே.சுரேஷ் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story