வேன்-மோட்டார்சைக்கிள் மோதல்: விசைத்தறி உரிமையாளர் உள்பட 2 பேர் சாவு
வேன்-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் விசைத்தறி உரிமையாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தார்கள்.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 38). விசைத்தறி உரிமையாளர். அவருடைய பட்டறையில் வேலை பார்க்கும் தொழிலாளி விஜயகுமார் (36). சீனாபுரம் அருகே உள்ள மாரநாய்க்கனூரை சேர்ந்தவர்.
இந்தநிலையில் விசைத்தறிக்கு உபகரணம் வாங்குவதற்காக ஜனார்த்தனனும், அவருடைய மனைவி மேனகாவும் (32), விஜயகுமாரும் நேற்று காலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கு மோட்டார்சைக்களில் சென்றார்கள். வண்டியை விஜயகுமார் ஓட்டினார்.
பெருந்துறை பெத்தாம்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அடுத்த ரோட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. நடுவில் தடுப்பு சுவர் இருப்பதால் விஜயகுமார் வந்த ரோட்டிலேயே திரும்பி சென்றார். அப்போது எதிரே வந்த வேனும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராத வகையில் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில் தூக்கிவீசப்பட்ட ஜனார்த்தனனும், மேனகாவும், விஜயகுமாரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜனார்த்தனனும், விஜயகுமாரும் உயிரிழந்தார்கள். மேனகாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த ஜனார்த்தனனுக்கு ஒரு மகனும்-ஒரு மகளும் உள்ளனர். இதேபோல் விஜயகுமாருக்கு பரிமளா (30) என்ற மனைவியும், ஒரு மகனும்-மகளும் உள்ளனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story