பல ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை 105 அடியை எட்டுகிறது
பல ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை எட்டுகிறது.
பவானிசாகர்,
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்றது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சகதி 15 அடி கழித்து அணையின் தற்போதைய கொள்ளளவு 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் தண்ணீரால் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் பவானி ஆற்றின் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் வழியாக சுமார் 50 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தநிலையில் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கடந்த 2007-ம் ஆண்டிற்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை கடந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பொதுப்பணித்துறை விதிப்படி அணையின் நீர்மட்டம் 102 அடி வரை மட்டுமே நிறுத்தப்பட்டது.
இந்தமாதம் (நவம்பர்) முதல் வருகிற மே மாதம் இறுதிவரை அணையின் முழு கொள்ளளவான 105 அடி வரை தண்ணீர் நிறுத்தி கொள்ளலாம் என்ற விதி உள்ளது. அதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடிக்கு மேல் தேக்கப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 104 அடியை தாண்டியது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை கீழ்பவானி வாய்க்கால் கரையில் உக்கரம் மில் மேடு அருகே உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 105 அடியை எட்ட உள்ளது.
நேற்று மாலை 4 மணியளவில் அணையின் நீர்மட்டம் 104.79 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 637 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Related Tags :
Next Story