மத்திய அரசை கண்டித்து தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 6:29 PM GMT)

மத்திய அரசை கண்டித்து தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிரு‌‌ஷ்ணன், இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சித்தையன், பாடி நாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.பி. பி.தீர்த்தராமன் தொடங்கி வைத்து பேசினார். மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். இந்தியா முழுவதும் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய சந்தையை சீரழிக்கும் மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தால் விவசாயிகள், வர்த்தகர்கள், சிறு,நடுத்தர வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி நடப்பு நிதியாண்டில் முதல் 3 மாதங்களில் வெறும் 2 சதவீதமாக குறைந்து விட்டது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு விவசாயிகளுக்கு அநீதி ஏற்படுத்ததாத வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

மூடப்படும் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் வட்டார தலைவர்கள் சுபா‌‌ஷ், ஜனகராஜ், காமராஜ், பூபதிராஜா, சரவணன், வேலன், வஜ்ஜிரம், மாவட்ட நிர்வாகிகள் வேடியப்பன், சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நவீன் நன்றி கூறினார்.

Next Story