நாகர்கோவிலில் ரூ.2¾ கோடியில் தொழிலாளர்துறை அலுவலக கட்டிடம் - காணொலி காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
நாகர்கோவிலில் ரூ.2¾ கோடியில் தொழிலாளர் துறை புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட தொழிலாளர்துறைக்கு ஒருங்கிணைந்த புதிய அலுவலக கட்டிடம் நாகர்கோவில் கோணத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே அந்த கட்டிடத்தை பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் தொழிலாளர் நலத்துறை ஊழியர்கள், பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழிலாளர் இணை ஆணையர் ஹேமலதா, தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) முகமது அப்துல்காதர் சுபையர், உதவி ஆணையர்கள் ஞானசம்பந்தன் (அமலாக்கம்), ராகவன் (தோட்டங்கள்), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) சுதாகர், உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) முருகன், உதவி பொறியாளர்கள் அனிஷ், மேரி நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடத்தில் தரைதளம் 509 சதுர மீட்டர் கொண்டதாகும். இதில் வரவேற்பறை, முத்திரை ஆய்வாளர் அலுவலகம், செயல்முறை திட்ட தர ஆய்வகம், வைப்பறை ஆகியவையும், முதல் தளத்தில் தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகம், நீதிமன்றம் ஆகியவையும், இரண்டாம் தளத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம், தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள்) அலுவலகம், உதவி மருத்துவர் (தோட்டங்கள்) அலுவலகம், கூட்ட அரங்கு ஆகியவையும் அமைந்துள்ளன. ஒவ்வொரு தளத்திலும் நவீன கழிப்பறைகள் ஆண், பெண் இருபாலருக்கும் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கழிவறை மற்றும் சாய்வுதளம் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story