மாணவி பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக அண்ணி கைது


மாணவி பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக அண்ணி கைது
x
தினத்தந்தி 9 Nov 2019 4:15 AM IST (Updated: 9 Nov 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் மாணவி பிணமாக மிதந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அண்ணியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

காங்கேயம் அருகே உள்ள சேமலைவலசு கிராமம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சீரங்கன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி திருமாயி. இவர்களுக்கு கார்த்தி என்ற மகனும், கலைவாணி (வயது 8) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் திருமாயி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சீரங்கன் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்று விட்டார்.

இதனால் கார்த்தியும், அவருடைய தங்கை கலைவாணியும், சீரங்கனின் தாயார் ஆராளின் பராமரிப்பில் இருந்து வந்தனர். கலைவாணி அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். மேலும் அவளுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததால், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் கலைவாணியை அடிக்கடி மருத்துவமனைக்கு கார்த்தி அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் கார்த்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஷாமிலி(19) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 17.7.2019 அன்று வீட்டில் இருந்த கலைவாணி திடீரென்று காணாமல் போய்விட்டார். இதை தொடர்ந்து அவளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியில்லை. மறுநாள் காலை ஊருக்கு அருகேயுள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் கலைவாணி பிணமாக மிதப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைவாணியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். உடல்நலம் பாதிக்கப்பட்ட கலைவாணி கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக கலைவாணியின் பாட்டி ஆராள் பேத்தியின் சாவு குறித்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். கலைவாணி காணாமல் போன அன்று ஷாமிலிதான் வீட்டில் இருந்துள்ளார். எனவே, கலைவாணி சாவில் சந்தேகம் இருப்பதாகவும், ஷாமிலியை விசாரிக்க வேண்டும் என்றும் காங்கேயம் போலீசில் புகார் செய்தார்.

இதுயொட்டி கார்த்தியின் மனைவி ஷாமிலியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில் கலைவாணியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததை ஷாமிலி ஒப்புக்கொண்டார். உடல் நலம் சரியில்லாமல் இருந்த கலைவாணிக்கு, தனது கணவர் கார்த்தி தொடர்ந்து செலவு செய்து வந்ததாகவும், இது பிடிக்காததால் சம்பவத்தன்று கலைவாணியை அழைத்து சென்று கிணற்றை பார்க்க சொல்லியுள்ளார். அப்போது கிணற்றில் கலைவாணியை திடீரென்று தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது

இதையடுத்து ஷாமிலியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை காங்கேயம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story