மேற்கு மண்டல சிறப்பு கமிஷனர் இடமாற்றம் செய்யப்படுவார்; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அறிவிப்பு


மேற்கு மண்டல சிறப்பு கமிஷனர் இடமாற்றம் செய்யப்படுவார்; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 3:45 AM IST (Updated: 9 Nov 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று பெங்களூரு மேற்கு மண்டல சிறப்பு கமிஷனர் இடமாற்றம் செய்யப்படுவார் என்று மேயர் கவுதம்குமார் அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் கவுதம்குமார் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கோவிந்தராஜ்நகர் வார்டு கவுன்சிலர் உமேஷ்ஷெட்டி பேசுகையில் கூறியதாவது:-

அதிகார பரவலாக்கல் மூலம் பெங்களூரு மாநகராட்சி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கு மண்டல சிறப்பு கமிஷனராக அன்புக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கவுன்சிலர்களை மதிப்பது இல்லை. எங்களை கேவலமாக பார்க்கிறார். கவுன்சிலர்களே கோப்புகளை கொண்டுவந்து, சேவகர்களை போல் அனுமதி பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அந்த கோப்புகளையும் அவர் சரியாக பார்ப்பது இல்லை. வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா தனது தொகுதியில் ஆய்வு செய்தபோது, சரியாக பணியாற்றாத, 2 அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அந்த அதிகாரிகளை அன்புக்குமார் பணி இடமாற்றம் செய்யவில்லை.

சரியாக பணியாற்றவில்லை என்று கூறி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவரை மேயரே பணி இடமாற்றம் செய்தார். அந்த அதிகாரி தனது செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் அதே இடத்திற்கு வந்துள்ளார். மேயர் உத்தரவுக்கும் மதிப்பு இல்லை என்ற நிலை தான் ஏற்பட்டு உள்ளது. அதனால் அன்புக்குமாரை வேறு இடத்திற்கு பணி இடமாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உமேஷ்ஷெட்டி கூறினார்.

உமேஷ்ஷெட்டியின் இந்த பேச்சுக்கு மற்ற கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து பேசினர். அன்புக்குமாரை வேறு மண்டலத்திற்கு மாற்றுமாறு சில கவுன்சிலர்கள் பேசும்போது, அவரை மாநகராட்சியை விட்டு வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று பேசினர். அப்போது அன்புக்குமாருக்கு ஆதரவாக கமிஷனர் அனில்குமார் பேச முயற்சி செய்தார்.

இதற்கு அனைத்துக்கட்சி கவுன்சிலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மேயர் கவுதம்குமார், சிறப்பு கமிஷனர் அன்புக்குமார் பணி இடமாற்றம் செய்யப்படுவார் என்று அறிவித்தார். உடனே கமிஷனர் அனில்குமார், அன்புக்குமாரை வேறு மண்டலத்திற்கு மாற்றுவதாக கூறினார். இதற்கும் எதிர்ப்பு எழவே, வேறு துறைக்கு அவர் மாற்றப்படுவார் என்று மேயர் கூறினார். அதன் பிறகு அனைத்து கவுன்சிலர்களும் அமைதி ஆனார்கள்.

முன்னதாக மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் முனிந்திரக்குமார் பேசும்போது, “பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள மாநகராட்சி சொத்துகளை பாதுகாக்க வேண்டும். மொத்தம் உள்ள 198 வார்டுகளில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களில் மாநகராட்சி சொத்துகள் இல்லை“ என்றார்.

அப்போது கவுன்சிலர் பத்மநாபரெட்டி பேசுகையில், “அந்த 110 கிராமங்களில் உள்ள அரசு நிலங்கள், மாநகராட்சி சொத்துகள் ஆகும். இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்குடன் விவாதிக்க வேண்டும்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதாவை சேர்ந்த மற்றொரு கவுன்சிலர் கட்டா சத்யநாராயணா, “நாங்கள் எங்கள் வார்டில் அரசு நிலத்தில் அங்கன்வாடி மையத்தை நிறுவியுள்ளோம். அதற்கு குடிநீர் வடிகால் வாரியம், தண்ணீர் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது சரியல்ல. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய தலைவரிடம் பேச வேண்டும்“ என்றார்.

இவ்வாறு மாநகராட்சி கூட்டத்தில் விவாதம் நடந்தது.

Next Story