மாவட்ட செய்திகள்

கன்னட அமைப்பினர் தாக்கியதை கண்டித்து 23 ஆயிரம் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம் + "||" + 23,000 private hospital doctors strike in protest of Kannada Organizers attack

கன்னட அமைப்பினர் தாக்கியதை கண்டித்து 23 ஆயிரம் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம்

கன்னட அமைப்பினர் தாக்கியதை கண்டித்து 23 ஆயிரம் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம்
கன்னட அமைப்பினர் நடத்திய தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
பெங்களூரு, 

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் மிண்டோ அரசு கண் ஆஸ்பத்திரி உள்ளது. அந்த ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை பெற்ற நோயாளிகள் சிலர், கண் பார்வை இழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கர்நாடக ரக்‌ஷண வேதிகே என்ற அமைப்பின் நிர்வாகிகள் சிலர் கும்பலாக சென்று, சம்பந்தப்பட்ட டாக்டரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது அந்த அமைப்பினர், அந்த டாக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது.

டாக்டரை தாக்கிய கன்னட அமைப்பினரை கைது செய்ய கோரி மிண்டோ, விக்டோரியா ஆஸ்பத்திரிகளின் பயிற்சி டாக்டர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பெங்களூரு வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

இந்த நிலையில் டாக்டரை தாக்கிய கன்னட அமைப்பினரை கைது செய்ய கோரி மிண்டோ, விக்டோரியா, வாணிவிலாஸ் ஆகிய ஆஸ்பத்திரிகளின் புற நோயாளிகள் பிரிவு டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த டாக்டர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கத்தின் கர்நாடக பிரிவு சார்பில் பாதிக்கப்பட்ட டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் சுமார் 23 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறிய அளவிலான மருத்துவ மையங்களில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. இதுபற்றி தகவல் அறியாத நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எந்த மருத்துவமனையிலும் மருத்துவ சேவை கிடைக்காததால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர்.

பெங்களூருவில் வாணிவிலாஸ், மிண்டோ, விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவில் சேவை கிடைக்காததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே, டாக்டரை தாக்கிய கன்னட அமைப்பினர் நகர போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்ட தகவலை, தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த அரசு டாக்டர்களிடம் பெங்களூரு மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி நேரில் வந்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “டாக்டரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் டாக்டர்களின் பாதுகாப்புக்காக தொழில் பாதுகாப்பு படையினரை நியமிப்பதாகவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்து வதாகவும் துணை முதல்-மந்திரி உறுதியளித்துள்ளார். அதனால் நீங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று நேற்று மதியம் 3 மணிக்கு மேல் பணிக்கு திரும்பினர். அதே போல் இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்களான தனியார் டாக்டர்களும் புறநோயாளிகள் பிரிவு சேவைக்கு திரும்பினர்.

இதனால் தனியார் மருத்துவமனைகளில் மதியம் வரை மூடப்பட்டிருந்த புறநோயாளிகள் பிரிவு திறக்கப்பட்டது. வழக்கம்போல் நோயாளிகளுக்கு மருத்துவ சேவை கிடைத்தது. கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டதை அடுத்து ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த பயிற்சி டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா நிருபர்களிடம் கூறுகையில், “டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோயாளிகளின் நலன் கருதி, புகாருக்கு உள்ளான எங்கள் அமைப்பினர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களின் மிரட்டலுக்கு பயந்து நாங்கள் சரண் அடையவில்லை“ என்றார்.